Sunday, August 4, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.




புதிய கல்விக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான  10% இட ஒதுக்கீடு புதுச்சேரியில் வழங்குவது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் நாராயணசாமி  தலைமையில்  தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்தனர். ஆலோசனை கூட்டத்தை பிரதான எதிர் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக புறக்கணித்தது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி,  அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான புது கல்விக் கொள்கையை நடைமுறை படுத்துவது சாத்தியமாக இருக்காது என்றும்  மாநிலத்திற்கு, மாநிலம் கல்வியின் திட்டங்கள் மாறுவதன் காரணமாக அதற்கு ஏற்றார் போல் கல்விக்கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்த அவர் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அனைத்து கட்சியினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை இன்னும் சில தினங்களில் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும்  புதுச்சேரியில் உள்ள மேல் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறை படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார் இதனிடையே புதுச்சேரியில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment